காட்டுமிராண்டி மொழி!
தந்தைப் பெரியார் ஒரு முழுப் பகுத்தறிவாளர். சமுதாயச் சீர்சிருத்தக்காரர். பழமை உணர்வுகளையும் கொள்கைகளையும் அறிவியல் கண்ணோட்டத்தோடு ஆராய்ந்து, அவற்றைத் தவறு சரியென்று தேர்ந்து, நன்மை தீமைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் மக்கள் அறிவியலாளர். புதுமை விரும்பி.
எனவே, தமிழ் மொழியையும் அவர் அறிவியல் கண்ணோட்டத்துடன் தான் அணுகினார். அது ஒரு பழைமையான மொழி என்பதற்காகவோ, சிறந்த இலக்கண இலக்கியச் செழுமை வாய்ந்தது என்பதற்காகவோ, அவர் அதைப் பாராட்டவில்லை.
அதில் உள்ள பாட்டு இலக்கியங்களையும், கதை இலக்கியங்களையும், வேறு சில கூறுகளையும் மக்கள் மனநலன் அறிவுநலன் இவற்றுக்குப் பயன் தரும் வகையில் ஆராய்ந்தார். அவற்றிலுள்ள மூட நம்பிக்கைகளையும் மக்களுக்குதவாத பழமைக் கருத்துகளையும் அவர் ஏற்றுக் கொள்ள மறுத்தார். அவற்றைக் கடுமையாகச் சாடினார். பொதுவாக மக்கள் வாழ்க்கைக்குப் பயன் தராத எந்த மொழிக் கூறையும் அவர் ஒப்புக்கொள்ளவில்லை. மேலும் தமிழ்மொழி புலவர்கள் பாங்கிலேயே அடைபட்டுக் கிடந்து, பொதுமக்கள் நிலைக்கு எளிமையாக பயன்படுத்த முடியாமல் இருப்பதை அவர் எண்ணி வருந்தினார். அதை அறிவியல் சிந்தனையுடன் முன்னேறுவதற்கு வாய்ப்பில்லாமல் சிறைபடுத்தி வைத்திருந்த பழமை விரும்பும் புலவர்களை கண்டித்தார். அவர்களுக்கு உணர்வில் உறைக்கும் படியாகத் தமிழ் மொழியை ‘ஒரு காட்டுமிராண்டி மொழி’ என்றும் கூறினார்.
-தென்மொழி, சுவடி-18, ஓலை-8,1982
பெரியாரும் தமிழும் - பாவலரேறு பெருஞ்சித்திரனார்.
நன்றி - பிரபாகரன் அழகர்சாமி
Comments
Post a Comment