Skip to main content

தையே தமிழர் புத்தாண்டு:

தையே தமிழர் புத்தாண்டு:
ஆளுநர் ஆய்வு தொல்காப்பியத்திலுமா?
- சுப.வீரபாண்டியன்
இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி திருக்குறளையும், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொல்காப்பியம், சிலப்பதிகாரம் ஆகிய இலக்கியங்களையும் தங்களின் உரைகளில் மேற்கோள் காட்டுவது நமக்கு மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. பிரதமர் குறிப்பிட்ட குறள் எது என்பதைக் கண்டறியத் தமிழறிஞர்கள் பலராலும் கூட முடியவில்லை என்பது ஒரு புறம் இருக்க, திருக்குறள் பற்றி அவருக்குப் பேசத் தோன்றியதே என எண்ணி நாம் மகிழ்கின்றோம்.
இப்போது தன் பங்கிற்குத் தமிழ்நாட்டின் ஆளுநர் தொல்காப்பியத்தை மேற்கொள் காட்டி சித்திரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்று கூறியிருக்கிறார். மராத்தியத்தில் பிறந்த அவர், தொல்காப்பியத்தில் ஆராய்ச்சி செய்து நம் புத்தாண்டைக் கண்டுபிடித்திருக்கிறார். அடடா! அவர் ஆய்வு நம்மைப் புல்லரிக்க வைக்கிறது.
தொல்காப்பியத்தில் ஓர் ஆண்டை ஆறு கால நிலைகளாகப் பிரித்து, அதில் சித்திரை மாதமே இளவேனிற்காலத்தில் தொடக்கமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது என்கிறார். தமிழர்கள் ஓர் ஆண்டை ஆறு பருவங்களாகவும், ஒரு நாளை ஆறு சிறு பொழுதுகளாகவும் பிரித்துள்ளனர் என்பது உண்மைதான். ஆனால் சித்திரை மாதமே இளவேனிலின் தொடக்கம் என்று இதுவரை யாரும் சொன்னதில்லை.
சித்திரை இளவேனிலா, முதுவேனிலா என்று கண்டறிய எந்தப் பெரிய ஆராய்ச்சியும் தேவையில்லை. மாண்பமை ஆளுநர் அவர்கள், இந்தச் சித்திரையில் தன் மாளிகையை விட்டு வெளியே வந்து, ஒரு பகல் நேரத்தில் அரைமணி நேரம் நடந்தால் போதும். இந்த மாதம் இளவேனில் இல்லை என்பதை கொட்டும் வியர்வை அவருக்கு உணர்த்திவிடும்.
அதை ஆய்வு செய்கிறேன், இதை ஆய்வு செய்கிறேன் என்று தொடங்கிய ஆளுநர் இப்போது தொல்காப்பிய ஆய்வில் இறங்கி விட்டார். ஆனால் தைமாதம்தான் தமிழர்களின் புத்தாண்டு என்று ஆய்வு செய்து முடிவெடுத்த தமிழ் அறிஞர்கள், ஆளுநர் புரோகித்தை விட சற்று அதிகமாகத் தமிழ் படித்தவர்கள். 1921ஆம் ஆண்டு சென்னைப் பச்சையப்பன் கல்லூரியிலும், 1939ஆம் ஆண்டு திருச்சியிலும் கூடி, திருவள்ளுவர் ஆண்டையும், தமிழ்ப் புத்தாண்டையும் முடிவு செய்த அவ்வறிஞர்கள் சிலரின் பெயர்களை நாம் பார்க்கலாம்;
1. மறைமலையடிகளார்
2. தேவநேயப் பாவாணர்
3. பேராசிரியர் க.நமச்சிவாயனார்
4. இ.மு.சுப்பிரமணியனார்
5. ந.மு.வே.நாட்டார்
இன்னும் அறிஞர்கள் பலர் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். அவர்களின் முடிவை மலேசியாவில் வாழ்ந்த கோ.சாரங்கபாணியார் போன்றவர்களும் ஏற்றுக்கொண்டனர். இவர்களின் தமிழ் அறிவு, புரோகித்தின் தமிழ் அறிவிற்கு எந்தவிதத்திலும் குறைந்ததில்லை.
தமிழ் அறிஞர்கள் எடுத்த முடிவு, இரண்டு அடிப்படைகளால் ஆனவை. ஒன்று, நம் இனத்தின் முகமாகவும், முகவரியாகவும் உள்ள திருவள்ளுவரை அடிப்படையாகக் கொண்டது. இரண்டு, சூரியனிடமிருந்து பூமி தெற்கு நோக்கி (தட்சாயணம்) நகரத் தொடங்குவதை நோக்கியது.
நம் ஆளுநர் ஆராய்ச்சியின்படியே கூட, இளவேனில்தான் ஆண்டின் தொடக்கம் என்றால், தை&மாசி ஆகிய இரு மாதங்களே நமக்கு இளவேனில். அதனால்தான்
“பலர் தொகுபு இடித்த தாது உகுசுண்ணத்தர்
தகை செய் தீம் சேற்று இன்ன நீர்ப் பசுங்காய்,
நீடு கொடி இலையினர், கோடு சுடு நூற்றினர்”
என வரும் சங்க இலக்கியப் பாடல் ஒன்று (பத்து-ப்பாட்டு), வீட்டிற்குச் சுண்ணாம்பு அடித்தும், இலை கொடி தோரணம் கட்டியும், தெற்கே சென்று திரும்பியதற்காகக் கதிரவனுக்கு நன்றி கூறிப் பொங்கல் வைத்த காட்சியை எடுத்து விளக்குகிறது. அதுவே தமிழ் மரபு. தை மாதமே தமிழ்ப் புத்தாண்டு.
ஆனால் கால ஓட்டத்தில் ஆரியர்களும், பிறகு வந்த நாயக்கர்களும் நம் மரபில் பல்வேறு திரிபுகளை ஏற்படுத்தி, மொழிக் கலப்புச் செய்து நம் பண்பாட்டைக் குலைத்தனர். அவற்றுள் ஒன்றுதான் இந்தப் புத்தாண்டுத் திரிபு.
பொதுவாக ஆண்டு என்றால் ஏதேனும் ஓர் இடத்தில் தொடங்கி வளர்ந்துகொண்டே போக வேண்டும். இன்று உலகின் பல பகுதிகளில் உள்ள ஆண்டுக் கணக்கு (2016, 2017, 2018...) கிரிகோரியன் நாட்காட்டியை (Gregorian calender) நாட்காட்டியை அடிதளமாகக் கொண்டது. தொடக்கத்தில் ஆண்டிற்குப் பத்து மாதங்களே கணக்கில் இருந்தன. கி-.மு. 45, ரோமானியப் பேரரசர் ஜுலியஸ் சீசரின் காலத்தில் ஜூலை மாதம் சேர்க்கப்பட்டு அது ஜூலியன் நாட்காட்டி என்று வழங்கப்பட்டது. பிறகு அகஸ்டஸ் சீசர் காலத்தில் ஆகஸ்ட் மாதம் உருவாக்கபட்டு இன்றுள்ள 12 மாதங்கள் வழக்கிற்கு வந்தன.
இது தவிர, அவரவர் மரபு, பண்பாட்டிற்கேற்ப இஸ்லாமிய நாட்காட்டி, ஈரானிய நாட்காட்டி எனப் பல்வேறு நாட்காட்டிகள் உலகில் உள்ளன.
நம் இனத்திற்கு எது அல்லது யார் அடையாளம்? சித்திரையில் பிறந்தவர் யார், அல்லது அறுவடை நடப்பது சித்திரை மாதமா? அவர்கள் மொழியிலேயே சொல்லவேண்டுமானால், தாட்சாயணக் கணக்கைப் பார்ப்பதா, உத்தராயணக் கணக்கைப் பார்ப்பதா? உத்தர் என்றால் மேலே அல்லது வடக்கே என்று பொருள். அதனால்தான் வடக்கில் மேலே உள்ள பகுதியை உத்தரப் பிரதேசம் என்று அழைக்கிறார்கள்.
இவை ஒரு புறமிருக்க, தமிழ் ஆண்டு என்று ஆளுநர் உள்ளிட்டோர் கூறும் ஆண்டுக் கணக்கு வளரும் தன்மையுடையதன்று, சுழலும் தன்மையுடையது. 60 ஆண்டுகள் முடிந்தபின், மீண்டும் பழைய இடத்திற்கே அது வந்துவிடும். ஒருவர் விளம்பி ஆண்டில் பிறந்தவர் என்றால், எந்த விளம்பி என்று எப்படிக் கண்டுபிடிப்பது? 2000 ஆண்டுகளில் எத்தனையோ விளம்பிகள் வந்துபோயிருக்கும். எந்த விளம்பியை விளம்புவது நாம்?
அடுத்ததாக, அவர்கள் கூறும் 60 தமிழ் ஆண்டுகளின் பெயர்களில் ஒன்று கூடத் தமிழாக இல்லையே! தமிழன் தன் ஆண்டுகளுக்கு பெயர் வைப்பதற்குக் கூடச் சொல் இல்லாதவனா?
இந்த ஆண்டுகள் எப்படித் தோன்றின என்பதற்குச் சொல்லப்படும் கதைகளோ, அருவெறுப்பும், ஆபாசமும் கொண்டவைகளாக உள்ளன. தமிழ் மரபுக்கும், பண்பாட்டிற்கும் நேர் எதிரானவை அவை. வேண்டுமானால் ஆளுநர் புரோகித் தன் சொந்த மண்ணில் இந்த ஆய்வுகளை நடத்திக் கொள்ளட்டும்.
நாம் அனைவரும் தமிழர்கள். நமக்கு மரபு உண்டு, பண்பாடு உண்டு, வரலாறும் உண்டு. நமக்கான ஆண்டுக் கணக்குகளை வரையறுத்துத் தரும் வல்லமைகொண்ட நல்லறிஞர்களும் உண்டு. எங்களுக்காக, பன்வாரிலால் புரோகித்கள் கவலைப்பட வேண்டாம்.

Comments

Popular posts from this blog

சம்புகன் கதை என்ன ?

சம்புகனின் கதையை முழுமையாக அறியமுடியவில்லை . அதைச் சொல்லவமுடியுமா என்று ஒரு தோழர் கேட்டிருந்தார் . அந்தத் தேடலின் பதிவாக இதோ சம்புகனின் கதை  ஸ்ரீ வால்மீகி அருளிய இராமானணத்தில் உள்ளபடி . இராமன் இலங்கைப்போர் முடித்து மகுடாபிஷேகம் செய்து கொண்டு அரசாட்சி புரிந்து வந்தார். அரசவையில் மந்திரிகளோடு அவர் ஆலோசனை செய்து கொண்டிருந்த வேளையில் அரண்மனை வாயிலில் ஒரு ஏழை பிராமணர் தன் கையில் ஒரு பாலகனின் உடலை ஏந்தியபடி கண்ணீருடன் நிற்கிறார் என அறிந்து அவரை உள்ளே அழைக்கிறார் ராமன். வயது முதிர்ந்த அந்த ஏழைப் பிராமணரைப் பார்த்து நீர் யார்?என்ன நடந்தது ? என்று இராமன் கேட்க அந்த பிராமணர் கூறினார் . "ஸ்ரீ ராமா இதோ இந்த பாலகன் என் மகன் வீட்டின் வெளியில் விளையாடிக் கொண்டிருந்தவன் திடுக்கென விழுந்து இறந்து விட்டான் . ஒரு பிராமணக் குழந்தை இவ்வாறு சாகிறதென்றால் அந்த தேசத்தின் ஆட்சியில் தர்மம் அழியுமாறு ஏதோ நடக்கிறது என்று அர்த்தம் . எனவே என் மகனுடைய மரணத்திற்கு நீயே பொறுப்பு " என்று கூறி தன் மகனின் சடலத்தை அரசவையில் ராமன் முன் கிடத்தினார் அந்த பிராமணர். மனம் கலங்கிப் போன ராமன் என் ஆட்சியில்...

பெரியார் என்னசெய்து கிழித்தார் என சொல்லும் ஆத்திக அன்பர்களே!

பெரியார் என்னசெய்து கிழித்தார் என சொல்லும் ஆத்திக அன்பர்களே! பெரியார் இறுதிவரை பார்ப்பனியத்தின் மீதும் இந்துமதத்தின் மீதுமட்டும் (பார்ப்பனர்கள் ,இந்துக்கள் மீத ல்ல .) ஏன் எதிர்த்தார் என்போரும் முழுவதும் படித்து தெளிவடையுங்கள் . ================ இளைஞர்களே உங்களுக்குத் தெரியுமா? 1895 ஆம் ஆண்டில் சென்னையில் நடைபெற்ற ஒரு நாடகத்தில் விளம்பரம் செய்யப்பட்ட ஒரு துண்டு நோட்டீசில் “பஞ்சமர்கட்கு இடம் இல்லை” என்று அச்சிட்டார்கள். சென்னையிலே இந்த நிலை 90 ஆண்டுகட்கு முன்பு! இந்த நிலையை மாற்றியது தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம் என்பது உங்களுக்குத் தெரியுமா ? 1925க்கு முன்பு தமிழ்நாட்டிற்குக் காந்தியார் வந்த போதெல்லாம் மைலாப்பூரில் சீனுவாசஅய்யங்கார் வீட்டுத் திண்ணையில்தான் உட்கார்ந்திருப்பார் -உள்ளே போகாமல். 1926க்குப்பின் தான் அவர் வீட்டுக்கு உள்ளே சென்றார். (காரணம் சுயமரியாதை இயக்கத்தினை பெரியார் ஆரம்பித்து பிரச்சாரம் செய்தார் 1925 முதல்) “மகாத்மா ” காந்திக்கே இந்தக் கதி என்பது உங்களுக்குத் தெரியுமா? பகத்சிங் துhக்கிலிடப்பட்டபோது ஆங்கிலேய அடக்கு முறைக்கு அஞ்சி, “ தேச பக்தர்கள்”வாய்மூட...

பெரியார்-அண்ணா-பாவாணர் : திராவிடம்

பெரியார்-அண்ணா-பாவாணர் : திராவிடம் இன்றையத் தமிழகச் சூழலில் திராவிட(ர்)/(ம்) என்ற “சொல்” பலராலும் பல் வேறு பொருளில் பயன்படுத்தப்படுகிறது. பொதுவான புரிதலில், திராவிடத்தைக் கொண்டு வந்தவர் பெரியார்தான் என்றும் ‘திராவிடம் என்பதே போலியான ஒன்று’ என ஒரு கருத்தும் உண்டு. “திராவிடந்தான் எல்லாம் தந்தது” என்ற மிகைப்படுத்தப்பட்டப் புரிதலும் உண்டு. எது சரி என்பதை அவரவர் புரிதலுக்கு விட்டுவிட்டு பெரியார், அண்ணா, பாவாணர் போன்றோர் திராவிட(ர்)/(ம்)-த்தை எப்பிடிக் கையாண்டனர்?அவையெல்லாம் ஒன்றா? என்பதைப் பற்றியே இப்பதிவு ! இவர்களில் எளிமையாகப் புரிந்துக் கொள்ளக் கூடியவர் பெரியார்தான். பெரியாரின் திராவிடரும்  திராவிடத் தமிழ் நாடும்  : பெரியார்தான் முதன்முதலில் திராவிடர் எனக் குறித்தார் என்பது உண்மையா? இல்லவே இல்லை ! அயோத்திதாசர்  ‘ சாதியற்ற திரவிட மஹா ஜன சபை ‘ என்னும் அமைப்பைத் துவக்கியது 1891-ல். அப்போது பெரியார்க்கு வயது 12 ! அதே நேரத்தில் ஜான்ரத்தினம் என்பவர் ‘ திரவிடர் கழகம் ‘ என்ற அமைப்பையும்  திராவிட பாண்டியன்  என்னும் பத்திரிக்கையையும் நடத்தி வந்தார். அ...