பெரியாரும் திராவிடஇயக்கமும் தமிழுக்கு எதுவுமே செய்யவில்லை என்று சொல்கிறார்களே? உண்மையா?
க.சுரேசு, கயத்தாறு.
க.சுரேசு, கயத்தாறு.
பொய். பெரியார் ஒருவர் தான் தமிழுக்கும், தமிழனுக்கும் பாடுபட்ட தலைவர். தமிழ் அறிவு என்பது வேறு. தமிழ் உணர்வு என்பது வேறு. தமிழ் உணர்வோடு இருக்கிறவர்கள் தமிழ் அறிஞராகத்தான் இருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. அவர்கள் பிழையோடு தமிழை பயன்படுத்துகிறவர்களாக இருந்தாலும் தவறில்லை. அதேபோல தமிழ் அறிஞர்கள் எல்லோரும் தமிழ் உணர்வோடு இருந்ததும் இல்லை.
திரு.வி.க தமிழ் அறிஞர் தான். ஆனால் அவர் நடத்திய பத்திரிகைகளின் பெயர்கள் நவசக்தி, தினசரி என்கிற சமஸ்கிருத பெயர்கள்.
பெரியார் தமிழறிஞர் இல்லை. ஆனால் அவர் நடத்திய பத்திரிகைகளின் பெயர்கள் ‘விடுதலை, குடியரசு, உண்மை’ என்கிற தனித்தமிழ் பெயர்கள்.
1938ல் தமிழ் மீது இந்தி திணிப்பு நடந்த போது, அதை எதிர்க்க வேண்டும் என்கிற சொரணையற்று இருந்தார்கள் தமிழறிஞர்கள். மறைமலையடிகள் போன்ற தமிழறிஞர்களுக்கு தமிழ் உணர்வை ஊட்டி, அவர்களை இழுத்து வந்து இந்தி எதிர்ப்பில் இறக்கியது பெரியார் தலைமையிலான திராவிட இயக்கம்.
மறைமலையடிகள் போன்றவர்களுக்கு நிறைய தமிழ் அறிவு இருந்தாலும் அவர்களின் உணர்வு சைவ சமயத்தின் மீதுதான் இருந்தது. பெரியார் சைவ சமயத்தை கடுமையாக எதிர்த்த போது, “ராமசாமி நாயக்கர் வைணவ குடும்பத்தைச் சேர்ந்தவர். அதனால் தான் அவர் சைவ சமயத்தை சாடுகிறார்” என உளறியவர் தான் மறைமலையடிகள், பெரியாரால் சைவ சமயத்திற்கு தீங்கு என்றவுடன் இயல்பாக பெரியார் மீது பொங்கி எழுந்த மறைமலையடிகள், தமிழுக்கு ஒரு தீங்கு வரும் போது, பெரியார் வந்து பிடித்து இழுக்கும் வரை பொங்கவில்லை.
புலவர்கள், தமிழறிஞர்கள் தமிழால் வளர்த்தது தமிழை அல்ல. சைவ, வைணவ சமயத்தைத்தான். அதனால் தான் தலைவர் பெரியார், தமிழை மதத்திலிருந்து விடுதலை செய்யப்பாடுபட்டார். அந்த அக்கறையின் பொருட்டே தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்றார்.
‘நமஸ்காரம்’ என்கிற சமஸ்கிருதத்தையும், “கும்புடுறேன் சாமி’ என்கிற அடிமை தமிழையும் ஒழித்து “வணக்கம்’ என்கிற சுயமரியாதை மிக்க சொல்லை அறிமுகப்படுத்தியது திராவிட இயக்கம் தான். இந்து மத அடையாளம் கொண்ட சமஸ்கிருத பெயர்களை ஒழித்து மிகப் பெருவாரியான உழைக்கும் மக்களுக்கு மத சார்பற்ற தனித்தமிழ் பெயர்களை வைத்தது தமிழறிஞர்கள் அல்ல. திராவிட இயக்கம் தான்.
அதிமுக துவக்கத்திற்குப் பின் நிலைமை தலைகீழாக மாறியதும், பின்னாட்களில் மாமி பொறுப்புக்கு வந்து பல குழந்தைகளுக்கு சமஸ்கிருத சாமி பெயர்களை வைத்ததும் உலகறிந்ததே. திராவிட இயக்கத்தை குறை சொல்லிக் கொண்டு தனித்தமிழ் பேசுகிற அறிஞர்கள், தலைவர்கள் தங்கள் பிள்øளகளுக்கு சமஸ்கிருத பெயர் தான் வைத்திருக்கிறார்கள் என்பதே அவர்களின் தமிழ் உணர்வுக்கு சாட்சி.
(கி.ஆ.பெ.விஸ்வநாதம் பரம்பரையில் இப்போது ஒரு தமிழ் பெயர் கூட இல்லை. இஸ்லாமியத் தமிழரான மணவை முஸ்தபா தன் மகன், மகள், பேரக் குழந்தைகள் வரை தமிழ் பெயர்கள் வைத்திருக்கிறார்.)
(கி.ஆ.பெ.விஸ்வநாதம் பரம்பரையில் இப்போது ஒரு தமிழ் பெயர் கூட இல்லை. இஸ்லாமியத் தமிழரான மணவை முஸ்தபா தன் மகன், மகள், பேரக் குழந்தைகள் வரை தமிழ் பெயர்கள் வைத்திருக்கிறார்.)
ஆக, பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழை வளர்த்து அதை வாழ வைத்துக் கொண்டிருப்பது நடுத்தர, உயர் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த தமிழறிஞர்கள் அல்ல. மொழியை கொச்சையாக பயன்படுத்துகிற தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட உழைக்கும் தமிழ் மக்களே. (பெரியாரும் உழைக்கும் மக்களைப் போல்தான் தமிழைப் பயன்படுத்தினார்.) சமஸ்கிருதத்திற்கு இன்றுவரை அறிஞர்கள் நிறைய இருந்தும் பேசுவதற்கு ஆள் இல்லாததால் தான், அந்த மொழி செத்துப் போனது.
*
வழக்கறிஞர் கு. காமராஜின் சமூக விழிப்புணர்வு மாத இதழுக்ககாக 2007 ஆம் ஆண்டு எழுதியது.
*
வழக்கறிஞர் கு. காமராஜின் சமூக விழிப்புணர்வு மாத இதழுக்ககாக 2007 ஆம் ஆண்டு எழுதியது.
நன்றி தோழர் வே மதிமாறன்
Comments
Post a Comment